Saturday, 2 April 2011

கண்ணாடி உலகம்



விழுதுகள் நிறைந்து வழியும் அந்த ஒற்றை மரத்தின் அழகினை நீண்டிருக்கும் எங்கள் மாடி மீது அமர்ந்து ரசிப்பதில் கொள்ளை விருப்பம் எனக்கு.  அதுவே என் வாடிக்கையாகவும் ஆகிப் போனது. என்னோடு வா என்றபடி என்னை அடிக்கடி அழைத்து செல்ல வரும் என் வெளிநாட்டு அத்தையிடம் மறுப்புகளை மட்டுமே பதிலாய் வைத்துவிட்டு பாட்டியுடனே அந்த விழுதுகளை ரசித்தபடி வாழத்தான் எனக்கு விருப்பம். நிதமும் என்னைத் தலைகோதி உறங்க வைக்க வெவ்வேறு வித கதைசொல்லியாகவே மாறிவிடுவாள் பாட்டி.

அப்படித்தான் ஒரு ராஜகுமாரி கதை கேட்கையில் என் அடிவயிறு வலிக்க ஆரம்பித்தது, எதையெதையோ சோதித்துவிட்டு என் பாட்டி என்னதான் பக்குவப்பட்டிருந்தாலும் சிறிது பதற்றத்துடன் தான் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தாள். தனியாக முடியாது என்று என் அத்தைக்கும் அழைப்பு விடுத்தாகி விட்டது. வந்திறங்கிய  என் அத்தையைக் கண்டதிலிருந்து என் பாட்டிக்கு மிகுந்த மகிழ்ச்சியாகிப் போனது, "கல்யாணி - கல்யாணி" என வீடெங்கும் அத்தையின் பெயராகவே ஒலித்துக் கொண்டிருந்தது சில நாட்களாய். அத்தையுடன் வந்திறங்கிய மதனும் என்னையே சுற்றி சுற்றி வந்தான் தன் அம்மா இல்லா தருணங்களில் என்னைப் பார்த்து விஷமமாய் கண்ணடிப்பான்.

ஒரு நாள் இரவில் ஏதோ ஊர்வதைப் போல் உணர்ந்தெழுந்த நான் என் முகத்தைக் கண்டவாறே மதன் அமர்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். நான் எழுந்ததைக் கண்டவுடன் என் வாயைப் பொத்தி கத்தாதே என்று கண்களாலேயே மிரட்டி வைத்தான். ஏனோ அவன் அணிவித்த சங்கிலி கழுத்தில் கம்பளிபூச்சியென ஊர்வதாய்  உணர்ந்தும் அவன் மிரட்டலுக்காகவே அதைக் கழட்டாமலேயே வைத்திருந்தேன். அத்தை கிளம்பும் நாளும் வந்தது ஒரு சில தினங்களில், நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் என்னைத் தனிமையில் சந்தித்து நிச்சயமாகத் திரும்பி வருவேன் என்று மிரட்டி ஒரு வில்லச்சிரிப்பும் விடுத்துத்தான் கிளம்பினான் மதன். அத்தையும் மதனும் கிளம்பிய உடனே சங்கிலியை உறுத்துகிறதென பாட்டியிடம் கழட்டிக் கொடுத்துவிட்டேன்.

அன்றொரு நாள் ராஜகுமாரியைக் கடத்திப் போகும் அரக்கனைப் பற்றிய கதை சொல்லிக் கொண்டிருந்தாள் பாட்டி, என்றுமல்லாது அன்று மிகவும் குரூரமாகவே வர்ணித்தாள் அந்த ஒற்றைக் கண் அரக்கனை. அது மட்டுமல்லாது அவன் உயிர் ஏதோ பல கடல் தாண்டி ஏதோ ஒரு கூட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் எனவும் அவனை எதுவும் எதிர்க்க முடியாது எனவும் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவள் தூங்கியும் போனாள். அடுத்த நாள் எழவே இல்லை, பக்கத்து வீட்டிலிருந்து வந்தவர்கள் சில கண்ணீர்த்துளிகளைச் சிந்திவிட்டு என் அத்தைக்கென தாமதிக்க வேண்டாமெனவும் உடனடியாக செய்வதைச் செய்யலாம் எனவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு ஓரளவு புரிந்துதான் இருந்தது, இருந்தும் மனமெங்கும் அவளாகவே நிறைந்திருந்தாள். பாட்டியை என்னிடம் இருந்து பிரித்த அடுத்த சில தினங்களாய் அந்த மாடியில் விழுதுகளையே கண்டவண்ணம் அமர்ந்திருந்தேன், பக்கத்து வீட்டு மாமியும் வந்து சாப்பிடச் சொல்லி கெஞ்ச ஓரிரு வாய் சாப்பிட்டு விட்டு மீண்டும் விழுதுகளையே பார்த்திருந்தேன். அவ்விழுதுகள் ஒவ்வொன்றும் பாட்டி சொன்ன ஒவ்வொரு கதையை நினைவுபடுத்த அந்த இடமே எனக்கு எல்லாமாகிப் போனது.

பாட்டி போலவே என்னைக் கவனித்துக் கொள்கிறாள் என் அத்தை. தினமும் ஒரு கதைசொல்லி, என் தலைகோதி தூங்க வைக்கிறாள். இருந்தும் அந்த விழுதுகள் மட்டும் என் கனவில் அடிக்கடி வந்து போகிறது. என்னுள் எல்லாமாய் நிறைந்து போயிருக்கும் விழுதுகள் என்னைக் கண்டு அழுவது போலவும் உணர்கிறேன் தினமும் இரவினில், அழுகைகள் அதிகமாகும் இரவுகளில் என் அத்தை கைகளைப் பற்றிக்கொண்டு உறங்கி விடுகிறேன். எங்கு தேடியும் அந்த விழுதுகள் போல இங்கே எதையுமே காண முடிகிறதில்லை. மதன் வர வர என்னைக் காணும்போதெல்லாம் உதட்டைக் கடித்து ஒரு விதமாய் புருவங்களைக் குறுக்குகிறான். அவன் கண்ணடிக்கும் போதெல்லாம் அந்த ஒற்றைக் கண் அரக்கன் நினைவிற்கு வந்து கண்களில் ஒருவித குரூரத்துடன் சிரிக்கிறான்.

நடுநிசி நாய்கள் - குரைக்கவும் குரலற்று..

2011 திரைப்படங்களில் போதுமான அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்திருக்கும் படம் "நடுநிசி நாய்கள்" எதிர்பார்ப்புகளுக்கு பதில் உரைக்கிறதா? கண்டுபிடிக்கவே இரண்டு மூன்று நாட்களாக மிகவும் சிரமப்பட்டு நேரம் ஒதுக்கி இன்று காலை சென்றிருந்தேன். "வாரணம் ஆயிரம்", "விண்ணைத் தாண்டி வருவாயா" திரைப்படங்களைப் பார்த்து எவராவது கெளதம் வாசுதேவ் மேனனிடம் வித்தியாசமாக முயற்சியுங்களேன் என்று கூறியிருப்பார்கள் போல. 'ரொம்பவே வித்தியாசமாக' முயன்றிருக்கிறார்.

nadunisi_naaygal_350திரைப்படத்தின் கதைக்களம் ஒரு தந்தை மகனை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதனால் மகன் எப்படி மன நோயாளியாக மாறுகிறான் என்பதுதான்.  மன நோயாளியாக மாறிய பின் அவன் செய்யும் பாலியல் வன்முறைகள் அளவுக்கு மீறியே காட்சிகளில் பார்வையாளர்கள் மீது அமிலங்களைத் தெளிக்கின்றன. இவ்வளவு வன்மம் தமிழ் திரைப்படங்களில் வரவில்லையா என்றால் கண்டிப்பாகக் கண்டிருக்கிறோம் அநேக படங்களில். அவ்வன்மங்கள் யாவுமே கதைவளத்துடன் நிறைந்திருக்கும். நான் நடப்பதை யதார்த்தமாக சொல்லுகிறேன் என்பதெல்லாம் வெறும் பேச்சு தான், தேவையற்ற பல வன்மங்கள் இப்படத்தில் கோர்க்கப்பட்டுள்ளன. படத்தின் கதாப்பாத்திரங்கள் யாவுமே யதார்த்தமன்றி ரொம்பவே செயற்கையாக நடமாடுகின்றன - குறிப்பிட்ட எவரையும் உதாரணமாகக் கூற இயலவில்லை அவ்வளவு செயற்கை பாத்திரங்கள் மத்தியில். இவ்வளவு பெண்களைக் கடத்தியும் காவல் துறையிடம் சிக்கிக்கொள்ளாமல் சாமர்த்தியத்துடன் செயல்பட்டவன் இப்படி எளிதாக சிக்கிக் கொள்வதற்கான எந்த ஒரு காரணமும் சொல்லப்பட்டதாகவும் தெரியவில்லை.

படத்தின் ஒரே நல்ல விஷயம் ஒளிப்பதிவு, அதுவும் பல இடங்களில் இயக்குநரால் ஒழுங்காக உபயோகிக்கப்படவில்லை  என்று அவ்வப்போது நம் முகத்துக்கு நேராகக் கைகாட்டி கொக்கரிக்கிறது. ஏதோ பல காட்சிகளை கோர்வையே அன்றி ஒன்று திரட்டி வெளியிட்டிருப்பதாகவும் ஒரு எண்ணம் தலை தூக்கிக் கொண்டே இருக்கிறது. தாய், தந்தை, காதலி என அனைத்து உறவுகளையுமே தாக்கிச் சின்னாபின்னமாக்கியிருப்பது வருத்தத்திற்கும் எதிர்ப்பிற்கும் உரிய விஷயம்தான்.

பாலியல் கொடுமைகள் ஆண் பிள்ளைகளுக்கும் நடக்கும் என்பது இறுதியாகக் காட்டப்பட்டு நிறைவுறுகிறது படம். தந்தையால் பாதிக்கப்படும் ஒரு ஆண் பிள்ளையின் கோபம் (சற்றாவது) ஆண்கள் மீது திரும்பியிருக்க வேண்டும். ஆனால் படத்தில் வரும் எந்த வன்முறையும் ஆண்களை எதிர்த்து இல்லாதது இயக்குநரை உறுத்தவே இல்லையோ? இதனாலோ என்னவோ அந்த மன நோயாளி மீது ஒரு துளி கூட பரிதாபம் காட்ட மறுத்து விடுகிறது மனம்.

படத்தைக் கண்டதிலிருந்து எவ்வளவு முறை முயன்று அலசினாலும் இந்நொடி வரை படம் எதற்காக எடுக்கப்பட்டது என்று புரிபடவே மாட்டேன் என்கிறது. மொத்தத்தில் நடுநிசி நாய்கள் தன்னந்தனியாக ஏதோ ஒரு இருளில் அமர்ந்து குரைத்துக் கொண்டிருக்கட்டும்.

இப்படிக்கு,
கெளதம் மேனனை ரொம்பவே நம்பி ஏமாற்றப்பட்ட ஒரு அபலை ரசிகன்.

யுத்தம் செய் - பலமாகவே மனதிற்குள்



விமர்சிக்கும் முன்னர் தமிழில் இந்த வகையான திரைப்படத்தை வெளியிட்ட மிஷ்கினுக்கு ஒரு வெற்றி படிக்கட்டை இட்டுவிட விருப்பம். ஏதோ பொழுதுபோக்குக்காக எடுக்கப்படாமல் திரைப்படங்கள் கதைக்கருவிலேயே சமூகத்திற்கு அழகான கருத்துக்களைச் சொல்ல முயல்கின்றன. அந்தவொரு வரிசையில் யுத்தம் செய் திரைப்படத்தையும் தாராளமாக நாம் சேர்த்துக் கொள்ளலாம் என்கிற பட்சத்தில் ஒரு சபாஷ். படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை இமைகள் மூடாது இருக்கை நுனியில் அமரச் செய்திருக்கும் திரைக்கதையின் சுவாரசியமான ஓட்டத்திற்கு அடுத்த சபாஷ்.

படம் முழுக்க வரும் பின்னணி இசை சற்று அதீதமாகத் தோன்றினாலும் பின்னணி இசையின் பங்கு இத்திரைப்படத்திற்கு ஒரு ஆழமான பகிர்வு என்பதை எவராலும் மறுத்து விட இயலாது. ஒளிப்பதிவு படத்திற்கு அடுத்த கூடுதல் விளக்கம். இவ்வளவு நேர்த்தியான ஒளிப்பதிவை மிகவும் சுலபமான முறையில் கையாண்டிருப்பதாகத் தோன்றும் அளவிற்கு உழைத்திருக்கிறார் சத்யா. சில இடங்களில் இவ்விருவருடைய பதிவுகள் நம்முள் நெருடி உண்மையைத் தேட முயற்சித்திருக்கிறது. எடுத்துரைக்க, கிருஷ்ணமூர்த்தியும் தமிழும் (சேரனும் தீபாவும்) துரத்தி வந்து சில நிமிடங்கள் தேடும் ஸ்கார்பியோ வண்டி திடீரென தோன்றும் இடத்தில் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் சற்று மிரளத்தான் வைக்கின்றன. காவல் நிலையத்தின் முன் தலை புலப்படும் இடத்தில் பின்னணி இசையில் ஒலிக்கும் பாட்டும் ஒளிப்பதிவும் யதார்த்தமாக கையாளப்பட்டிருக்கும் விதம் இதயத்தின் ஓரத்தில் ஏதோ ஒரு உணர்வைத் தட்டி எழுப்பி விடுகிறது. பலே சத்யா மற்றும் கே, தமிழ் திரைப்பட உலகிற்கு மீண்டும் இரு வரப்பிரசாதங்கள்.

கதாபாத்திரத் தேர்வு, மிஷ்கின் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றினாலும், ஒவ்வொரு பாத்திரமும் தனக்கான யதார்த்தத்தைச் சுமந்து போயிருப்பது படத்திற்கு வலிமை சேர்த்துள்ளன. என்ன தான் Y.G. மகேந்திரன் அருமையாக நடித்திருந்தாலும் படம் பார்க்கும் அவ்வளவு நெஞ்சங்களையும் அள்ளிக் கொண்டு போயிருப்பதேனோ லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தான். எவ்வளவு வன்மம் பார்வையில். இப்படியொரு கதாபாத்திரத்தைத் தைரியமாக எடுத்துக் கையாண்டிருக்கும் பாணி, எந்த ஒரு கலவரமுமற்ற ஒரு நடிப்பை அள்ளி தெளித்தமைக்கு வெற்றி தொடரும் வாய்ப்புகள் அதிகம். தமிழ் (Dipa Shah) கதாபத்திரத்தை சற்று அதிகமாக உபயோகப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் மேலிட்ட அதே நேரம் ஒரு பெண் அதிகாரி எப்படி ஆராய்ந்து தெளிவடையும் நோக்குடன் செயல்படுவாள் என்று இரண்டு மூன்று இடங்களில் காட்டியிருக்கும் மிஷ்கின் அந்த பாத்திரத்திற்கான பெருமையையும் தட்டிச் சென்று விடுகிறார். படத்தின் இறுதியில் சேரனின் தங்கையைப் பணயக் கைதியாக காட்டியவுடன் மகேந்திரன் லக்ஷ்மி தம்பதியரின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களின் தெளிவு அருமை.

அமீர் தோன்றும் பாடல் எந்த வகையிலும் படத்திற்கு பலம் சேர்க்கவில்லை, சற்று வியாபார நோக்கும் கலந்திருப்பதாக ஒரு எண்ணம் மனதில் சப்பணமிட்டு அமர்ந்து விடுகிறது. வசனங்கள் சிறிது மணிரத்னம் படங்களை நினைவுபடுத்துவது ஒரு பெரிய சறுக்கல். Peep show  என்னும் காட்சிகளை சற்று குறைத்திருக்கலாம், குறைத்திருந்தால் கதைக்கருவின் வீரியம் குறைந்து விடுமோ என்ற பயம் கூட மிஷ்கினுக்கு இருந்திருக்கலாம். செல்வா மற்றும் யுகேந்திரனின் முகபாவங்கள் சிறிது படத்தோடு ஒத்து வந்திருக்கலாம். எவ்வளவுதான் சொன்னாலும் மிகப்பெரிய ஜே போட வேண்டும் மிஷ்கினுக்கு இப்படி ஒரு திரைப்படத்தை தைரியமாக தமிழில் கொணர்ந்ததற்கு. தற்சமயம் பாலியல் கருக்கள் திரைப்படங்களில் அதீதம், எனினும் ஒரே வகையாக அல்லாமல் புது விதமாகக் கதைக் கருவைக் கையாண்டிருப்பது அருமை மற்றும் அழகு.

படத்தின் plus-கள்:
1) லக்ஷ்மி ராஜசேகரன்
2) பின்னணி இசை - கே
3) ஒளிப்பதிவு - சத்யா
4) படத்தொகுப்பு - ககின்
5) ஜெயப்ரகாஷ்
6) திரைக்கதை

படத்தின் minus-கள்:
1) கன்னித்தீவு பாடல்
2) Dipa shah
3) Peep show காட்சிகளின் அதீதம்

பரபரப்பும் எதிர்பார்ப்பும் நொடிக்கு நொடி திரைக்கதையில் கூட்டியிருப்பது மிகப் பெரிய சாதனை. மொத்தத்தில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் மிஷ்கினின் இன்னுமொரு அறுசுவை விருந்து குடும்பத்துடன் அல்லாமல் நண்பர்களுடன் அமர்ந்து ருசிக்க வேண்டிய ஒன்று.