
போகன் திரைப்படத்தின் செந்தூரா பாடல்.. கவிதாயினி தாமரை அவர்களின் விரல்களின் தீண்டலில் மையென உருகுகிறது காதல்.. இசையமைப்பாளர் D இமான் இசையில், லட்சுமி சிவனேஸ்வரலிங்கம் அறிமுகப் பாடகியின் குரல் மேற்கத்திய பாணியில் ஓங்கி நிற்கிறது...
"நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்,
நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்,
நீதான் மனம் தேடும் மாண்பாளன்
நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்,
நீதான் மனம் தேடும் மாண்பாளன்
பூவாய் எனை ஏந்தும் பூபாளன்
என் மடியின் மணவாளன் எனத் தோன்றுதே!!"
மனம் தேடும் மாண்பாளன், பூவாய் ஏந்தும் பூபாளன், மடியின் மணவாளன்..
அட! அட! அட! என்ன ஒரு கோர்வை (கவிதாயினி தாமரைக்கே உரித்தான மென் ஆளுமை!!)
மன்னவனை எதிர் நோக்கி, நினைந்து இப்படி அழகாய் கோர்த்து குழைந்து வழிகிறாள், அடுத்து ஒரு வித ஆதிக்கம் கலந்து கொஞ்சுகிறாள் - செந்தூரா!!
மன்னவனை எதிர் நோக்கி, நினைந்து இப்படி அழகாய் கோர்த்து குழைந்து வழிகிறாள், அடுத்து ஒரு வித ஆதிக்கம் கலந்து கொஞ்சுகிறாள் - செந்தூரா!!
செந்தூரம் - சிகப்பு/செம்மை, பெண்மைக்கே உவமையாய் இது வரை ஆளப்பட்டு வழி வழியாய் வந்த ஒரு வார்த்தையை முற்றிலும் வேறாக பயன்படுத்தி இங்கே ஓர் ஆணை, தன் மணவாளனை, ஒரு பெண் ஆளுமை கலந்து அழைக்கிறாள், அவ்வளவு உரிமையாய் வலிந்த குரலில் ஆள்கிறாள்..
"செந்தூரா..... சேர்ந்தே செல்வோம்.. செந்தூரா..
செங்காந்தள் பூ உன் தேரா!!
மாறன் அம்பு ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா?"
செங்காந்தள் பூ - பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்புமையாகச் சொல்லும் ஒரு மலரை தேராக அமைத்து வருகிறானோ என வியக்கும் நிலைப்பாடைத்தான் என்ன அருமையாய் எடுத்து வைக்கிறாள்.. நான் இப்படி மயங்கி கிடக்கிறேன், உன்னை எண்ணி கிறங்கி துயில் கொள்கிறேன்!!
தாமரை - காதல் போதையைத் தூண்டும், முல்லை - காதல் பித்தம் தலைக்கேறச் செய்யும், அசோகம் - காதலால் உணவை மறக்கச் செய்யும், மா - காதல் நினைவில் பசலை உருவாக்கும், நீலோற்பவம் - விரகதாபம் தூண்டி உயிரையே ஊசலாடச் செய்யும் கொடுந்தன்மை வாய்ந்தது - இவ்வகையிலான மன்மதனின் ஐந்து மலர்களால் ஆன அம்புகளையும் என்னைச் சுற்றியுள்ள காற்றினில் எய்து என்னை கிறங்கடிக்க செய்கிறாயோ? என்று வியந்து வினவுகிறாள்!! -
"நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்..
விரல்களைப் பிணைத்தவாறு பேச வேண்டும்!
காலை எழும்போது நீ வேண்டும்
தூக்கம் வரும்போது தோள் வேண்டும்..
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்!!"
இதுவரை எதனால் இப்படி இருக்கிறேன் என வியந்து கொண்டிருந்தவள், எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என கனவுகளால் ஒரு கூடுவாழ் பறவையின் மகிழ்வென எளிய வாழ்வைக் கட்டமைக்கிறாள்..
"மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா?
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா?
பாடல் கேட்போமா? பாடிப் பார்ப்போமா?
மூழ்கத்தான் வேண்டாமா?
யாரும் காணாத இன்பம் எல்லாமே
கையில் வந்தே விழுமா?
நீயின்றி இனியென்னால்
இருந்திட முடிந்திடுமா?"
நீ என் வாழ்வில் அடியெடுத்து வைக்கையில் யாரும் காணாத சிறு சிறு இன்ப உணர்வுகளை நம் கையில் தானாக அமைந்து விழ வைப்போமா? என தனக்கான யதார்த்தமான கனவுகளை அடுக்கி எழுப்புவதாய் அவளின் என்ன சிதறல்களை பின்னுகிறார் கவிதாயினி தாமரை..
கதைப்போமா என்ற வார்த்தைதான் அந்த ஒற்றை வரியையே அழகாய் நிறுத்தி வைக்கிறது.. மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் பேசுவோமா!! எனும் போது அதன் காதல் குறைந்து ஒரு யதார்த்த உரையாடலை புகுத்தி இருக்கும்!! கதைப்பதாய் எழுதி காதலைச் சொட்ட விட்டிருக்கிறார்..
கதைப்போமா என்ற வார்த்தைதான் அந்த ஒற்றை வரியையே அழகாய் நிறுத்தி வைக்கிறது.. மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் பேசுவோமா!! எனும் போது அதன் காதல் குறைந்து ஒரு யதார்த்த உரையாடலை புகுத்தி இருக்கும்!! கதைப்பதாய் எழுதி காதலைச் சொட்ட விட்டிருக்கிறார்..
"அலைந்து நான் களைத்து போகும்போது அள்ளி,
மெலிந்து நான் இளைத்துப் போவதாகச் சொல்லி,
வீட்டில் நளபாகம் செய்வாயா?
பொய்யாய் சில நேரம் வைவாயா?
நான் தொலைந்தால் உனைச் சேரும் வழி சொல்வாயா?"
மிக எளிமையான ஒரு பொருளாடல், அழகானதோர் சொல்லாடலில் தவழ்வதை இவ்வரிகளில் பார்க்க முடிகிறது.. தாமரை <3 >3 <3
"கண்கள் சொக்கச் செய்தாயா? கையில் சாய சொல்வாயா?
ஏதோ ஆச்சு! வெப்பம் மூச்சு! வெட்கங்கள் போயே போச்சு!!"
ஒரு பாடலின் முடிவு இவ்வளவு இனிமையாய் அழகியல் வரைய முடியுமா? எப்படி??
கவிதாயினி தாமரை!!!
காதலியல்!!
இவ்விரு வரிகள் போதும், வேறு என்ன சொல்ல!!!
- தேனு

